

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர். தப்பிச் செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய கொலையாளியை போலீஸார் கைது செய்தனர்.
அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(80). இவரது மனைவி பருவதம் (72). விவசாயக் குடும்பத்தை சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, தம்பதி கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் ஆகியோர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். பின்னர், இருவரது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தம்பதியின் வீட்டருகே பழனிசாமியின் உறவினரான ரமேஷ் (40) என்பவர் வசித்து வருவதும், இவர் வளர்த்து வரும் கோழி, ஆடு, மாடுகள் பழனிசாமியின் தோட்டத்துக்குள் சென்று சேதப்படுத்தியதும், இது தொடர்பாக அடிக்கடி தம்பதிக்கும், ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ், தம்பதியின் வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றபோது, அவிநாசி புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரமேஷை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.