

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 11) விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற வீரபெருமாள் என்பவருக்கு சிபிசிஐடி போலீஸார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேரில் இன்று (மார்ச்.11) ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீரபெருமாள் விசாரணைக்கு ஆஜரானார். காலை முதல் மதியம் வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அச்சமயத்தில் இவருக்கு, பாதுகாப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்த ஒருவர் செல்போன் மூலமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதன் பின்னர், அந்த ஆய்வாளரின் செல்போனை, பாதுகாப்புப் பிரிவு போலீஸார் வாங்கியுள்ளனர். இத்தகவலை இந்த வழக்கை முன்பு விசாரித்த, மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக்கு குழுவினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த செல்போன் விவகாரம் குறித்தும், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான தகவல்கள் குறித்தும் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக அப்போது இருந்த வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னர், வெளியே வந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான வீரபெருமாள் கூறியது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் நான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றவில்லை. அவரிடம் நான் பணியாற்றியதாக கூறப்படுவது தவறான தகவல். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, விசாரணைக்கு ஆஜரானேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். என்ன கேள்விகள் கேட்டனர்? என வெளியே கூறமுடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991 காலகட்டத்திலும், 2002 முதல் 2016-ம் ஆண்டு அவர் உயிரிழக்கும் வரையிலும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினேன். அவரது மறைவுக்கு பிறகு, வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டேன். மீண்டும் விசாரணைக்கு ஆஜராவது குறித்து சிபிசிஐடி எதுவும் கூறவில்லை” என்றார்.