காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொன்ற கும்பல் தப்பியோட்டம்! 

 காஞ்சிபுரம் அருகே திருக்காளிமேடு பகுதியில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட ரவுடி வசூல் ராஜா.
 காஞ்சிபுரம் அருகே திருக்காளிமேடு பகுதியில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட ரவுடி வசூல் ராஜா.
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, செம்மரக்கடத்தல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ‘வசூல் ராஜா’ நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் இவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசூல் ராஜா (38). இவர் மீது கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, செம்மரக்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் திருக்காளிமேடு பகுதியில் வணிகம் செய்பவர்களிடம் அவ்வப்போது மிரட்டி பணம் பறித்து வந்தார். சிறையில் இருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியில் வந்துள்ளார்.

வெளியில் வந்த இவர் தனது நண்பர்களுடன் திருக்காளிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தலையில் ஹெல்மெட்டுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வசூல் ராஜா மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவர் மீது மேலும் சில நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

ஏற்கெனவே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் வசூல் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்நிலையில், அதே வகையில் நாட்டு வெடிகுண்டு வீசி வசூல் ராஜாவை ஒரு குழுவினர் கொலை செய்துள்ளனர். இதனால் இந்தக் கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. திருக்காளிமேடு முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதுபோல் ரவுடிகளுக்குள் நடக்கும் மோதலால் நடக்கும் கொலை, வசூல் வேட்டையில் நடக்கும் கொலைகள் என காஞ்சிபுரம் பகுதியில் தொடர் கொலைகளை கட்டுப்படுத்தவும், ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் போலீஸார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in