

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், 2-வது தெருவைச் சேர்ந்தவர் தேவிகா (40). இவருக்கு கொளத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் (32) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது.
அப்போது, வினோத் குமார் எனக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும், தான் நினைத்தால் அவர்கள் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தர முடியும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய தேவிகா கடந்த 2023-ம் ஆண்டு 2 தவணைகளாக வினோத்குமாரிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி அவர் தேவிகாவுக்கு வீடு வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தேவிகா புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வினோத்குமார் பணம் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், அவர் இதே போன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வினோத் குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.