

மதுரை: மதுரை அருகே ஓய்வுபெற்ற பெண் ்அரசு அலுவலரை நகைக்காக கொன்று உடலை சாக்குமூட்டையில் வீசிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை பகுதியில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி வீசப்பட்டார். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு,போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த பெண் இந்திராணி (70) என்பதும், அவரது கணவர் நடராஜன் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவர், வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வந்ததுள்ளார்.
ஏற்கெனவே இந்திராணியைக் காணவில்லை என செல்லூரில் வசிக்கும் அவரது தங்கை கிருஷ்ணவேணி, அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் அவரைத் தேடிவந்தனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக மதுரை வில்லாபுரம் சந்திரசேகர்(50), கீரைத்துறை அமர்நாத்(36) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இந்திராணியிடம் நகையைக் கொள்ளையடித்துவிட்டு, அவரை கொலை செய்தது தெரிந்தது. இக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.