

ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளிக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவரை அரிவாளால் வெட்டிய மூன்று சிறுவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினமும் ஊரில் இருந்து பேருந்து மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு தனியார் பேருந்தில் மாணவர் சென்றுகொண்டிருந்தார். அந்த பேருந்து கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது, சுமார் 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி ஏறியுள்ளனர்.
பின்னர், பேருந்துக்குள் இருந்த மாணவரை, வெளியே இழுத்துபோட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், அந்த மாணவருக்கு தலையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால், அந்த சிறுவர்கள் 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீஸார் விரைந்து வந்து வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் பயணம் செய்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களில் ஒருவரது தங்கையிடம், மாணவர் காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அந்த மாணவி தனது வீட்டில் தெரிவித்துள்ளார்.
விவரம் தெரிந்த அவரது அண்ணன் தனது உறவினர்களான இரண்டு சிறார்களை அழைத்துச் சென்று மாணவரை தாக்கியுள்ளார் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.