மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் 8 வடமாநில இளைஞர்கள் கைது

மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் 8 வடமாநில இளைஞர்கள் கைது
Updated on
1 min read

கோவை: கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வு எழுத ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் 8 பேரை சாயிபாபா காலனி போலீஸார் திங்கள்கிழமை (மார்ச் 10) இரவு கைது செய்தனர்.

கோவையில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழுவின் இயக்குநர் குன்ஹி கண்ணன் என்பவர் கோவை சாயிபாபாகாலனி போலீஸாரிடம் இன்று (மார்ச் 10) புகார் மனு அளித்தார். அதில், ‘‘கோவை வனத்துறை அலுவலக வளாகத்தில் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில், கடந்த மாதம் 8-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய இருநாட்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப்ஸ் (எம்.டி.எஸ்) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு நடத்தியது.

தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில் தகுதியில் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலிடப்பட்டனர். பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களை ஆவண சரிபார்ப்புக்காக நேற்று ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதில் எம்.டி.எஸ் பதவிக்கான ஆவண சரிபார்ப்பின் போது, அதற்கு வந்த 8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்த போது வந்திருந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், மேற்கண்ட 8 பேரும், எழுத்துத் தேர்வின் போது கலந்து கொள்ளவில்லை என்றும், ஆள் மாறாட்டம் மூலம் வேறு நபர்கள் இவர்களுக்கான தேர்வுகளை எழுதியது தெரியவந்தது. இதில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிகுமார் (26), நரேந்திரகுமார் (24), பிபன்குமார் (26), பிரசாந்த்குமார் (26), லோகேஷ் மீனா (24), அசோக்குமார் மீனா (26), அரியானாவைச் சேர்ந்த ஷிபம் (26), பிஹாரைச் சேர்ந்த ராஜன்குமார் (21) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் சாயிபாபாகாலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதின் இறுதியில் மேற்கண்ட 8 பேரையும் இன்று (மார்ச் 10) இரவு கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in