

நல்லம்பாக்கம்: தன்னுடன் வைத்திருந்த உறவை கைவிட்டதால் காட்டுக்கு அழைத்து சென்று பெண்ணை கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அழுகிய நிலையில் சடலத்தை தாழம்பூர் போலீஸார் நள்ளிரவில் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். டெய்லரான இவரது மனைவி செல்வராணி, நல்லம்பாக்கத்தில் உள்ள யுனி ஹோம்சில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். அப்போது யுனி ஹோம்சில் வாடகை வீட்டில் குடியிருந்த குமரேசன் என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் அவரது கணவருக்கு தெரிய வந்ததால் குமரேசனுடன் இருந்த தொடர்பை செல்வராணி கைவிட்டுள்ளார். செல்வராணிக்கு குமரேசன் பல நாட்களாக போனில் தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் ஆத்திரமடைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வராணி வீட்டில் இருந்து சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் தனது மனைவியைக் காணவில்லை என்று தாழம்பூர் போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தாழம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், செல்வராணிக்கு கடைசியாக போன் செய்த நபரின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது குமரேசன் என தெரியவந்தது.
இதனை அடுத்து நேற்று இரவு குமரேசனை பிடித்து போலிசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது, தன்னுடன் நெருக்கமாக பழகி வருவதை செல்வராணி கைவிட்டதால் தான் ஆத்திரமடைந்ததாகவும், தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக பொய் கூறி செல்வராணியை கடந்த 3ஆம் தேதி தனது பைக்கில் ஒத்திவாக்கம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று அவரது துப்பட்டா மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் குமரேசன் கூறியுள்ளார்.
இதனை அடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் குமரேசனை போலீஸார் அழைத்துச்சென்று காட்டில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குமரேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆவதும், மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதும், திருமணத்துக்கு முன்பே கடந்த 5 வருடங்களாக செல்வராணியுடன் தொடர்பில் அவர் இருந்து வந்ததும், குமரேசனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் செல்வராணி கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் ஆத்திரமடைந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.