

மீரட்: தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தார் வெளியில் கூறாமல் இருக்க ரூ.2.5 லட்சம் கொடுத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹபூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான தலித் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தாரை உயர்சாதி வகுப்பினர் மிரட்டினர். மேலும், இந்த சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.2.5 லட்சம் தரப்பட்டது.
இந்நிலையில் அந்த உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த நபர், அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் ரூ.2.5 லட்சத்தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை ஹபூர் போலீஸ் எஸ்.பி. கன்வார் ஞானன்ஜெய் சிங்கிடம் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் தந்தை கூறும்போது, “சம்பவம் நடந்த பின்னர் பஞ்சாயத்துக்கு எங்களை அழைத்து மிரட்டி பணியவைத்தனர். இதற்காக ரூ.2.5 லட்சமும் கொடுத்தனர். நாங்கள் வேறு ஒரு கிராமத்துக்கு சென்று எனது மகளின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் அந்த உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த நபர், மணமகனுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி திருமணத்தை நிறுத்திவிட்டார். இப்போது நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் போலீஸில் புகார் கொடுத்தோம்” என்றார். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.