போக்சோ குற்றவாளி விடுதலையானால் தாமதமின்றி மேல்முறையீடு செய்க: டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

போக்சோ குற்றவாளி விடுதலையானால் தாமதமின்றி மேல்முறையீடு செய்க: டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: போக்சோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.

போக்சோ வழக்கு ஒன்றை விசாரித்த விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபரை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்தும், இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்கியிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்ததில் பல்வேறு குறைகள் உள்ளன. எனவே அரசு இந்த விவகாரத்தில் ஏன் உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என கேள்வி எழுப்பி, இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்புக்கு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா அனுப்பியுள்ள கடிதத்தில், “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களுக்காக போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளிலும், பிற கொடுங்குற்ற வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்தால் அதை எதிர்த்து விசாரணை அதிகாரியும், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர்களும் உடனடியாக அதில் சிறப்பு கவனம் செலுத்தி தீர்ப்பு விவரத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

அந்த வழக்கில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து உரிய சட்ட ஆலோசனைப் பெற்று காலதாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை ஆய்வாளர்கள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு டிஜிபி தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்,” என்று அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in