

திருத்தணி: திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசு பேருந்து மீது கல் குவாரியிலிருந்து வந்த லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில், அரசு பேருந்து ஒன்று இன்று மாலை திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கே.ஜி.கண்டிகை அருகே உள்ள கல்குவாரியில் இருந்து வேகமாக சென்ற லாரி, அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து, பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளில், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த திருத்தணி போலீஸார் சம்பவ இடம் விரைந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 20 பேர் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.