சென்னை | வங்கியில் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.29.50 லட்சம் பெற்று மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை | வங்கியில் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.29.50 லட்சம் பெற்று மோசடி செய்த 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: வங்கியில் ரூ.5 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.29.50 லட்சம் மோசடி செய்ததாக பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வர் (48). நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய அலோசியஸ் (38) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஈஸ்வர் அவருக்கு பல தவணைகளாக ரூ.8.5 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர், ஆரோக்கிய அலோசியஸ், புழல் எம்.எம்.பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற மாலதி (38), செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த கனகராஜ் (39) ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது, கல்பனா, தனியார் வங்கி ஒன்றில் அதிகாரிகளைத் தெரியும் என்றும், தன்னால் ரூ.5 கோடிவரை கடன் பெற்றுத் தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் நம்பிய ஈஸ்வர் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கிலும் என மொத்தம் ரூ.21 லட்சத்தை கமிஷனாக கொடுத்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி ரூ.5 கோடி கடன் பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஈஸ்வர், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஆரோக்கிய அலோசியஸ், கல்பனா, கனகராஜ் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in