

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 6) விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் விசாரித்த உதகை போலீஸார் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. மேலும், இவ்வழக்குடன், எஸ்டேட் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கையும் இணைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கோவை சிபிசிஐடி போலீஸார் தற்போது கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தவர்கள், எஸ்டேட் நிர்வாகிகள், சந்தேகத்துக்குரிய நபர்கள் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் உதவி ஆய்வாளர், மின் ஊழியர், ஓட்டுநர் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜன் இன்று (மார்ச் 6) காலை ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
எஸ்டேட் வளாகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்த பின்னர் அது தொடர்பாக தகவல் கிடைத்தது எப்படி?, எத்தனை மணி நேரம் கழித்து தகவல் கிடைத்தது?, தகவல் கூறியது யார்?, எஸ்டேட் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு எப்படி?, மின் இணைப்பு எவ்வாறு இருந்தது?, எஸ்டேட் வளாகத்தில் இருந்த பொருட்கள் என்னென்ன?, கொள்ளைச் சம்பவத்துக்கு பிறகு அங்கிருந்து மாயமான பொருட்கள் எவை?, எஸ்டேட் வளாகத்துக்கு அடிக்கடி வந்து சென்ற சந்தேகத்துக்குரிய நபர்கள் யார்?, எஸ்டேட் வளாகத்தில் வேலை செய்தவர்களின் நடவடிக்கைகள் எப்படி? இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அப்போது போலீஸாரிடம் தெரிவித்த தகவல்கள் என்னென்ன என்பது குறித்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவரை அங்கிருந்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.