ஊரப்பாக்கத்தில் டேங்கர் லாரி பின்னால் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு 

ஊரப்பாக்கத்தில் முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் உருக்குலைந்த கார்
ஊரப்பாக்கத்தில் முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் உருக்குலைந்த கார்
Updated on
1 min read

ஊரப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் முன்னால் சென்ற டேங்கர் லாரியில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் டேனிஷ் ரெட்டி (21), இவர் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள வல்லாஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக், 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திரா மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவரது நண்பர்கள் ஸ்ரேயர்ஸ் (21), ஹரிணி (21), உமா (20), முகமத் ஜைத் (19), ஆகிய 5 பேரும் இன்று (மார்ச் 6) அதிகாலை வல்லாசேரியில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

ஊரப்பாக்கம் டீ கடை பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த டேனிஷ் ரெட்டி, காரில் அமர்ந்து இருந்த ஸ்ரேயர்ஸ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பின்னால் அமர்ந்திருந்த உமா, ஹரிணி, முகமத் ஜைத் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் கார் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்து பற்றிய தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த இரண்டு மாணவிகள், மற்றும் ஒரு மாணவர் ஆகியேரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 2 மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in