

செங்குன்றம்: செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 37 டன் ரேஷன் அரிசியை புதன்கிழமை இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பாடியநல்லூர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள சேமிப்பு கிடங்கு அருகே லாரி ஒன்றில் 37 டன் ரேஷன் அரிசி இருப்பதும், அது அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினர் 37 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு, அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற சென்னையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், மாதவன் மற்றும் லாரி ஓட்டுநர் மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி மற்றும் 2 லகுரக வாகனங்களையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.