சென்னைக்கு ஹெராயின் கடத்தல்: அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் கைது
சென்னை: சென்னைக்கு ஹெராயின் கடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் உட்பட சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் எழும்பூர் போலீஸார் கடந்த 3-ம் தேதி இரவு எழும்பூர் வடக்கு ரயில் நிலைய புக்கிங் அலுவலகம் அருகே ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் 3 இளைஞர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர். இதைக் கவனித்த போலீஸார் அவர்களிடம் சென்று விசாரித்தனர். அப்போது, 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களின் உடமைகளை சோதித்தபோது ஹெராயின் மற்றும் மார்பின் என்ற போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் கடத்தி வந்ததாக அசாம் மாநிலம், நாகோன் மாவட்டம், கட்டாகுரியைச் சேர்ந்த ஹபிபூர் ரகுமான் (32), அதே மாநிலம் கிரிக்கோனியைச் சேர்ந்த தில்தார் உசேன் (22), ரெய்கிபுல் இஸ்லாம் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் அசாம் மாநிலத்திலிருந்து போதைப் பொருட்களை ரயில் மூலம் கடத்தி வந்து, அவர்களது கூட்டாளிகளிடம் ஒப்படைக்க காத்திருந்தபோது போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர், அவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
