நாமக்கல்லில் மனைவி, இரு குழந்தைகள் மர்ம மரணம் - தேடப்பட்ட கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரேம்ராஜ் 
கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரேம்ராஜ் 
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல்லில் மனைவி மற்றும் இரு குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் வங்கி ஊழியர் கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் பதிநகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மோகனப்பிரியா (33) என்ற மனைவி, பிரினிதிராஜ் (6) என்ற மகள், ஒன்றரை வயதில் பிரினீஷ்ராஜ் என்ற மகனும் இருந்தனர். நேற்று பிரேம்ராஜ் வீட்டில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் மர்மமமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் வரை பணத்தை இழந்ததால் பிரேம்ராஜ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தது தெரியவந்தது. எனினும், வீட்டில் பிரேம்ராஜ் இல்லாததால் மோகனப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவான பிரேம்ராஜை பிடிக்க நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டம் அமராவதி பாலம் அருகே ஓடும் ரயில் முன் பிரேம்ராஜ் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தனிப்படை காவல் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது பிரேம்ராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மோகனப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளின் உடல்கள் புதன்கிழமை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூவரும் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in