

நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் மனைவி, மகள் மற்றும் ஒன்றரை வயது மகன் ஆகிய 3 பேரும் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பதிநகரைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மோகனப்பிரியா (33) என்ற மனைவி, பிரிநித்திராஜ் (6) என்ற மகள், ஒன்றரை வயதில் பிரினிராஜ் என்ற மகனும் இருந்தனர். இன்று மதியம் வரை பிரேம்ராஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது மோகனப்பிரியா மற்றும் அவரது மகள், மகன் ஆகிய 3 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்து கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைபற்றினர். அந்தக் கடிதத்தில் ‘ஆன்லைன் மூலம் கடந்த சில தினங்களில் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டேன். இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியமில்லை. எனவே நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டோம். எங்களை மனித்துவிடுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வீட்டினுள் மோகனப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளின் உடல்கள் மட்டும் இருந்தது. பிரேம்ராஜ் வீட்டில் இல்லை.
இதையடுத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரேம்ராஜ் செல்போன் எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அதேவேளையில் மூவரும் கொலை செய்யப்பட்டார்களாக என்ற கோணத்திலும் நாமக்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் என மூவர் உயிரிழந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.