

திருச்சி: திருச்சிக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், சந்தேகத்துக்கு மூட்டையில் இருந்து ரூ.22,000 மதிப்புள்ள 2.200 கிலோ உலர் கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜி.எம்.ஈஸ்வரராவ் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில், மற்றவிரோத போதை பொருள் கடத்தலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி எல்.பாஸ்கர், திருச்சி ஆர் பி எஃப் இன்ஸ்பெக்டர் கே.பி.செபாஸ்டின் ஆகியோர் தலைமையில் திருச்சி ஆர் பி எப் போலீஸார் இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சிக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்குரிய ஒரு மூட்டை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது, அதில் 2.200 கிலோ உலர் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.பின்னர் கைப்பற்றப்பட்ட ரூ.22,000 மதிப்புள்ள 2.200 கிலோ கஞ்சாவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் திருச்சி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.