கோவை: சந்தேகத்தால் மனைவி சுட்டுக்கொலை; பாலக்காடுக்கு தப்பிச் சென்று கணவர் தற்கொலை

கோவை: சந்தேகத்தால் மனைவி சுட்டுக்கொலை; பாலக்காடுக்கு தப்பிச் சென்று கணவர் தற்கொலை

Published on

கோவை: கோவையில் நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவர், பாலக்காட்டிற்கு தப்பி சென்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவரது மனைவி சங்கீதா (45). சிங்கப்பூர், மலேசியாவில் வேலை பார்த்துவந்த கிருஷ்ணகுமார், தற்போது மனைவி, மகள்களுடன் பட்டணம்புதூரில் வசித்து வந்தார். இதனிடையே கிருஷ்ணகுமாரின் மனைவி சங்கீதா, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சங்கீதா, டாக்டர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், அவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் இன்று காலை கணவன், மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து மனைவி சங்கீதாவை சுட்டார். இதில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கிருஷ்ணகுமார் அங்கிருந்து காரில் புறப்பட்டு தனது சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வண்டாழி மங்களம் டேம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த சூலூர் போலீஸார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல பாலக்காடு மாவட்ட போலீஸார் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in