

சென்னை: பணத் தகராறில், பேருந்து ஓட்டுநரை கடத்தி தாக்கிய டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் கோபி. சென்னை, சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.
அப்போது, அவர் பணி செய்த நிறுவனத்தில் ரூ.31 ஆயிரம் முன்பணம் பெற்றார். பின்னர், பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து திடீரென நின்று விட்டு சொந்த ஊர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபி கடந்த 28-ம் தேதி வானகரம், மீன் மார்கெட் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
இதையறிந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சூளைமேடு மேற்கு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த விஜய் அங்கு சென்று கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விஜய், நண்பர் துணையுடன் கோபியை கடத்தி சூளைமேடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி தாக்கி உள்ளார். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய கோபி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விஜய், அவரது நண்பர் பூந்தமல்லியைச் சேர்ந்த திவாகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.