

தாம்பரம்: பீர்க்கன்காரணை பகுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை வேல் நகரை சேர்ந்தவர் கலாவதி (47). சேலையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருடைய மகன் யோசுவா (15). பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பிப்.27-ம் தேதி பள்ளியில் இருந்து கலாவதியை தொடர்பு கொண்டு உடன் படிக்கும் மாணவர் ஒருவரை யோசுவா அடித்து விட்டதாக கூறி பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கு தற்போது வேலையில் இருப்பதால் மறுநாள் வருவதாக கலாவதி கூறியுள்ளார். கலாவதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது யோசுவா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீஸார் மாணவர் யோசுவாவின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆசிரியர்கள் கண்டித்ததால், மன உளைச் சலில் இருந்த யோசுவா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மாணவர் எழுதிய கடிதத்தில் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்து விடுமாறும், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், அட்வகேட் மேடம் ஆகியோர் தான் செய்யாத தவறுக்கு அடிக்கடி திட்டியதாகவும், அவர்களால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது எனவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்றும், உண்மையான காரணத்தை போலீஸார் மறைப்பதாகவும் கூறி யோசுவாவின் உறவினர்கள், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட முயன்றனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே யோசுவாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீஸார் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அறிக்கை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு கல்வி அலுவலர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 3 பேரிடம் நேற்று விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.