

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.40 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், ‘சென்னை வடபழனியைச் சேர்ந்த ஹேமலதா (51) மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஐயப்பன் (42) ஆகியோர் எனக்கும், என்னுடன் சேர்ந்து 32 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.40 கோடி பணம் பெற்று, போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார். இவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், இருவரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.