Published : 02 Mar 2025 10:45 AM
Last Updated : 02 Mar 2025 10:45 AM
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்தபோது ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் கடந்த 27ம் தேதி சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை வீட்டின் பணியாளர் கிழித்த நிலையில், அங்கு வந்த காவல் துறையினரை சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல் ராஜ் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர், அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அமல்ராஜை போலீஸார் கைது செய்ய முயன்றதால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீஸார், அமல் ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று, காவல்துறை ஜீப்பில் ஏற்றினர். தொடர்ந்து பாதுகாவலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமல்ராஜின் மனைவி மற்றும் முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT