

கோவை: கோவையில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 8 .45 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மதுக்கரை வழியாக ஒரு கும்பல், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வருவதாக மதுக்கரை போலீஸாருக்கு இன்று (மார்ச் 1) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மதுக்கரை போலீஸார், பாலத்துறை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
சோதனையின்போது, அவர்கள் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் (28)), நபில்(30), கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(30), அப்துல்நாசர்(36), ஷாஜகான்(28), சாதிக் பாஷா(29) ஆகியோர் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ 45 கிராம் கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.