

சென்னை: வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை மது போதையில் தாக்கிய 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீஸார் கடந்த 26-ம் தேதி இரவு அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மறுநாள் அதிகாலை அதே பகுதி டி.எச்.ரோடு மற்றும் ரத்தின சபாபதி தெரு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் (33) மீது சந்தேகத்தின் பேரில், மது போதையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்தனர்.
அப்போது, கோதண்டராமன் மது அருந்தியிருப்பது தெரிந்தது.இதையடுத்து, அவருக்கு அபராதம் விதித்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து 3 பேரையும் அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோதண்டராமன் உள்ளிட்டமூவரும் உதவி ஆய்வாளர் மற்றும் 3 போலீஸாரிடமும் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து கோதண்டராமன் மற்றும் கொருக்குப்பேட்டை தட்டான் குளத்தைச் சேர்ந்த கண்ணன் (25), அதே பகுதி ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த கலைமணி (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.