

மும்பை: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தத்தாத்ரே ராம்தாஸ் கடே என்ற 37 வயது நபரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர் ஒருவர், மற்றொரு பிளாட்பாரத்தில் பேருந்து நிற்பதாக கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை புனே போலீஸார் ஆய்வு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டனர். 8 தனிப்படைகள் அமைத்து விரிவான தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இந்நிலையில் புனே மாவட்டத்தின் ஷிரூர் தாலுகா குணாட் கிராமத்தில் குற்றவாளியான தத்தாத்ரே ராம்தாஸ் கடேவை (37) போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
ராம்தாஸ் கடே உணவும் தண்ணீரும் கேட்டு இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை நேற்று முன்தினம் அணுகியுள்ளார். இதையடுத்து குற்றவாளி தங்கள் பகுதியில் இருப்பதாக அக்குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு, ஒரு வயலில் ராம்தாஸ் கடேவை சுற்றிவளைத்து பிடித்தனர்.
திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ராம்தாஸ் கடே ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.