

கரூர்: அரசுப் பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்படுவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானா அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படையினர் குறிப்பிட்ட அரசுப் பேருந்தில் சோதனையிட்டனர்.
அந்த பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த ரகு என்கிற நாகேந்திரன் (29), மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தற்போது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூரில் வசிக்கும் ராம்குமார் (24), மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் (24), மதுரை நாகுபிள்ளை தோப்பு யோகேஸ்வரன் (20), மதுரை அனுப்பானடி நவீன்ராஜ் (20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி அங்கிருந்து ரயில் மூலம் சேலம் கொண்டு வந்து, அங்கிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து மூலம் கொண்டு செல்வது தெரியவந்தது. கரூர் நகர போலீஸார் மேற்கண்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கண்ட 5 பேர் மீதும் மதுரை, விருதுநகர், கோவை மாவட்டங்களில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கைது செய்த கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.