

ஓசூர்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 715 கிலோ செம்மரக் கட்டைகளை ஓசூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் அருகேயுள்ள கூசனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜு (43). இவரது வீட்டின் பின்புறம் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்கரேவுக்கு தகவல் வந்தது. ஏஎஸ்பி உத்தரவின் பேரில், பாகலூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ராஜு வின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டின் பின்புறம் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து. செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸார். அவற்றை ஒசூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவான ராஜுவை போலீஸார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது. “பறிமுதல் செய்யப்பட்ட 715 கிலோ செம்மரத்தின் மதிப்பு ரூ.35 லட்சமாகும். இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடியாகும். தலைமறைவான ராஜுவைத் தேடி வருகிறோம். அவரை பிடித்தால்தான். பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தெரியவரும்” என்றனர்.