Published : 26 Feb 2025 05:14 AM
Last Updated : 26 Feb 2025 05:14 AM

பாட்டி, தோழி, தம்பி உட்பட 5 பேர் வெட்டிக்கொலை: போலீஸில் சரணடைந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

பாட்டி, பெண் தோழி, தம்பி உட்பட 5 பேரை இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. கொலைச் சம்பவங்களுக்குப் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான வெஞ்சரமூடுவில் வசிப்பவர் அஃபான் (23). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார். அவர் போலீஸாரிடம் கூறும்போது, தனது தாய், பாட்டி, பெண் தோழி, 13 வயது தம்பி உட்பட 6 பேரை கொலை செய்துவிட்டேன் என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை கைது செய்து லாக்கப்பில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து வெஞ்சரமூடு போலீஸார், அஃபானின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவரது வீட்டில் பெண் தோழி, தம்பி, தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதில் பெண் தோழி, தம்பி ஆகியோர் இறந்துவிட்டனர். அவரது தாய் உயிருடன் இருந்ததால் போலீஸார் அவரை மருத்துவமனையில் உடனடியாக சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து அவர் உயிர் பிழைத்துவிட்டார். அவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு இருந்தது.

இதைத் தொடர்ந்து அஃபான் கூறிய மற்றொரு வீட்டுக்கு போலீஸார் சென்றபோது அங்கு பாட்டி இறந்துகிடந்தார். மற்றொரு வீட்டில் அவரது மாமா, அத்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். மொத்தம் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அஃபான் மொத்தம் 5 பேரை கொலை செய்து போலீஸில் சரண் அடைந்துள்ளார்.

இதுகுறித்து வெஞ்சரமூடு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அஃபானின் தந்தை, துபாயில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தைக்கு ரூ.75 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தார் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளனர். அப்போதுதான் இந்தக் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் அஃபான் தனது பெண் தோழியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளார். பின்னர் 13 வயது தம்பி, சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாமா வீட்டுக்கு சென்று அவரையும், அவரது அத்தையையும் கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்துள்ளார். பின்னர் பாட்டியின் வீடடுக்குச் சென்று அவரையும் கொன்றுள்ளார். இதில் அவரது தாய் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். தந்தைக்கு ஏற்பட்ட கடன் தொடர்பாக குடும்பத்தாருடன் அஃபானுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தையின் கடனை அடைக்க பணம் தருமாறு தாய், பாட்டி, மாமாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர். தகராறு முற்றியதால் கோபமடைந்து அனைவரையும் கொலை செய்தேன் என்று அஃபான் வாக்குமூலம் கொடுத்துள்ளார்" என்றார்.

இதனிடையே, போலீஸில் சரணடைந்த பின்னர் போலீஸ் நிலையத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு அஃபான் முயன்றுள்ளார். போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர். அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் ஒருவர் 5 பேரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x