

விருதுநகர்: அருப்புக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக அஞ்சல் உதவியாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (38). சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த இவர், ஓராண்டுக்கு முன்பு அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்துக்கு அயல்பணியாகச் சென்றார். அப்போது, கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அஞ்சலக வாடிக்கையாளர்கள் செலுத்திவந்த ரூ.5 கோடியை தனது சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து, முறைகேடு செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அமர்நாத்தை தேடி வந்தனர். இவரைப் பிடிக்க காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில், சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில், ஆய்வாளர் மீனா, எஸ்.ஐ. பாரதிராஜா கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அமர்நாத்தை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர்நாத், சிறையில் அடைக்கப்பட்டார். முறைகேடு செய்த பணத்தில் ரூ.4 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது. மீதி பணத்தையும் மீட்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.