விருதுநகர்: அஞ்சலக பணம் ரூ.5 கோடி மோசடி; உதவியாளர் கைது

விருதுநகர்: அஞ்சலக பணம் ரூ.5 கோடி மோசடி; உதவியாளர் கைது
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ.5 கோடி முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (38). சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் அயற்பணியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை இவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கணினி வழி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 18.05.2024ம் தேதி வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அமர்நாத்தை தேடி வந்தனர். இவரைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்பேரில், விருதுநகர் மாவட்ட கணிணிவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மீனா, எஸ்.ஐ. பாரதிராஜா, காவலர் பொன்பாண்டி ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அமர்நாத் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அருகாமையில் உள்ள தனியார் விடுதியில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற தனிப்படை போலீஸார் அமர்நாத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அமர்நாத் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அவர் முறைகேடு செய்த பணம் ரூ.5 கோடியில் இதுவரையில் ரூ.4,58,90,068 மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மீதமுள்ள பணத்தை மீட்க கணினி வழி குற்றப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in