

தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேஉள்ள பூமி நத்தம் பகுதியில் சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை மற்றும் குடோன் உள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு... இங்கு கம்பைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சகோதரிகளான செண்பகம் (35), திருமலர் (37), மற்றும் திருமஞ்சு (34) ஆகியோர் நேற்று பணியில் இருந்தனர். பிற்பகல் 2 மணியளவில் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், பட்டாசு குடோன் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இந்த விபத்தில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
வெடிவிபத்தால் ஏற்பட்ட தீயைஅரூர் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி அணைத்தனர். விபத்து குறித்து கம்பை நல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆட்சியர் நேரில் ஆய்வு விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சதீஸ், ஆ.மணி எம்.பி,காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், அரூர்டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர்,சம்பத்குமார் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்ததையறிந்து வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கும், அவர்களதுஉறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்ள்ளேன்” என தெரிவித்துள்ளார்