வீடு புகுந்து திருடிய வழக்கில் ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் நகைகள் பறிமுதல்

வீடு புகுந்து திருடிய வழக்கில் ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் நகைகள் பறிமுதல்
Updated on
1 min read

பள்ளிக்கரணை: கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை அண்ணா நகர் காவல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் 24-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளைக் குறி வைத்து காரில் வந்து திருடியதாக போலீஸாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்திருந்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக் கரணை போலீஸாருக்கு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டியன் ஜெயசில், ஆய்வாளர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2019-ல் நீலாங்கரை, கானத்தூர் பகுதிகளில் வீடுகளில் திருடி சிறை சென்று வந்தது தெரியவந்தது. ‘குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன். திருந்தி வாழப்போகிறேன்’ எனக் கூறி, பிரியாணிக் கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாரிடம் திருந்தி வாழப் போவதாக கூறி பிரியாணிக் கடை வைத்துக் கொண்டு, நள்ளிரவில் காரில் யாரும் இல்லாத சிசிடிவி கேமரா இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்ததாக போலீஸாரிடம் கூறியுள்ளார்.

மேலும் ஞானசேகரிடம் இருந்து சொகுசு கார், சுமார் 100 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 7 திருட்டு வழக்குகளில் இன்னும் 150 பவுன் நகைகள் குறித்து விசாரிக்க மீண்டும் போலீஸ் காவல் கேட்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in