

திருவள்ளூர்: சென்னை, கொளத்தூர், ஜி.கே.எண்.காலணி, ஆசாத் தெருவில் வசித்து வரும் கலைவாணன் என்பவர், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள சோலை அம்மன் நகரை சேர்ந்த விக்னேஷ், அவரது மனைவி ரேகா இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜீலை மாதம் என்னை சந்தித்துப் பேசினர்.
அப்போது, அவர்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்தை இரட்டிப்பாக ஆக்கி தருவதாகக் கூறினர். அப்போது, நான் எங்களிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் தங்களுடைய நண்பர் சதீஷ் என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், உங்களுக்கு நாங்களே அவரிடம் சொல்லி உங்களுடைய ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வங்கி தருகிறோம் என்றும், கடனை தாங்களே அடைத்து விடுவதாகவும் கூறினர்.
இதை நம்பி சதீஷ் என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு எனது முழு விபரங்களையும் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு எனக்கு வங்கிக் கடன் கிடைத்த உடன், அந்தப் பணத்தை அப்படியே விக்னேஷின் வங்கி கணக்கு மற்றும் அவர்கள் கூறிய சில நபர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எதுவும் செய்யவில்லை. என்னை போன்றுமேலும் 18 பேரிடம் இருந்தும் இதேபோல் கூறி ரூ.6.46 கோடி வரை ஏமாற்றி உள்ளனர். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது ஆவடி மத்திய குற்றப் பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.