

சென்னை: பல்வேறு மாநில காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்டை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சின்னகார்த்திக், பன்னாபுரம் கார்த்திக், ராஜேஷ், குமார், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வலம் வந்துள்ளார். இவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து, அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் பரப்புவதிலும் சட்டவிரோவிதமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் அவ்வியக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக கேரள மாநில வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்த இயக்கத்துக்கு ஆதரவாக சட்டவிரோத செயல்களை மேற்கொள்ளும் வகையில், தமிழகத்தில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து தேடி வந்துள்ளது. இவ்வாறு, பல்வேறு மாநில காவல் துறையினரும், உளவு துறையினரும் கார்த்திக்கை தேடி வந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு கியூ பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்து வந்த மாவோயிஸ்ட் கார்த்திக்கை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.