

சென்னை: பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சகோதரர்கள் உள்பட 3 பேரை வியாசார்பாடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்படி, பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (51). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முதுநிலை மேலாளராக பணியாற்றுகிறார்.
இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 57 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மாரிமுத்து இது தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்..
இதில், மாரிமுத்து வீட்டில் கைவரிசை காட்டியது மகாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த சந்திரகாந்த் ஆனந்த் மானே (32), அவரது சகோதரர் அதே மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் ஆனந்த் மானே (28) மற்றும் மங்கேஷ் சாங்கிள் (27) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் தமிழகம் தவிர ,கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அங்கு பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நகைகளை விற்று கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.