Published : 21 Feb 2025 08:48 PM
Last Updated : 21 Feb 2025 08:48 PM
கோவை: கோவையில் பெண்கள், சிறார்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளம் பெண்கள், சிறுமிகள் (சிறார்கள்) மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் சமீபத்திய நாட்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர், கோவையில் 17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மாநகரில் தொடர்ச்சியாக பெண்கள், சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதும், அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. 18 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கோவையில் புதிது புதிதாக தொடர்ந்து பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தடையின்றி நடக்கின்றன.
பள்ளி, கல்லூரிகள், பணிபுரியும் இடம், வசிப்பிடம் அருகே, பயணிக்கும் வாகனம் என இட வேறுபாடு இன்றி, வயது வித்தியாசம் இன்றி, பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ‘‘மாறி வரும் பழக்க வழக்கம், ஒருவருடன் பழகும் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் மூழ்கி முன்பின் தெரியாதவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்தல் போன்றவை பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்க முக்கிய காரணங்கள்’’ என சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
மேலும், பெற்றோர்களும் தங்களது சிறார்களின் நடவடிக்கை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், அவர்களது செய்கையில் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக விசாரிக்கவும் வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் சிறார்கள் பயத்தினால் கூட பாலியல் தாக்குதல்களை வெளியே தெரிவிக்க தயங்கலாம். அதை தவிர்க்க இணக்கமான சூழல் அவசியமாகும்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு செயலாளர் சுதா கூறும்போது, ‘‘பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளிக்க பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் உள்புகார் கமிட்டி அமைக்க வேண்டும். இதை மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கும் கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். கோவையில் பள்ளிகளில் மட்டுமே இக்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் கல்லூரிகள், நிறுவனங்கள் குறித்து விவரங்கள் அவர்களிடம் இல்லை. உள்புகார் கமிட்டியை அமைப்பது தொடர்பாக தொடர்ந்து நாங்கள் வலியுறுத்துகிறோம். பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு, அத்தவறை செய்யக்கூடாது என்ற பயம் ஏற்பட வேண்டும். புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை, பாரபட்சமற்ற நடவடிக்கை ஆகியவை அவசியமாகும். எப்ஐஆர் பதிவு மட்டுமின்றி, அடுத்தகட்டமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், தண்டனை பெற்றுத் தருதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றார்.
கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறும்போது, ‘‘பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து கைது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காவல்துறையினர் மூலம் பள்ளி, கல்லூரிகளில் தொடுதல், தவறான தொடுதல் குறித்து நேரடி விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் தயங்காமல் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT