

சென்னை: துபாய் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5வது குறுக்கு தெருவில் உள்ள இரண்டடுக்கு மாடியில் வசித்து வருபவர் சுலைமான் (67). தொழில் அதிபரான இவர் துபாயில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு சென்றார்.
கடந்த மாதம் 3ம் தேதி சென்னை வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1.50 கிலோ தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், 1 லேப்டாப், 1 ஆப்பிள் ஐ-போன் மற்றும் 3 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என மொத்தம் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அக்காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சுலைமான் வீட்டில் கொள்ளையடித்தது அவரது வீட்டில் கார் ஓட்டுநராக பணி செய்து வந்த நேபாளம், சிந்துலியைச் சேர்ந்த சந்திர பரேயர் (31) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்திர பரேயர், நேபாளத்தைச் சேர்ந்த அவரது பெண் தோழி உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதும், இதற்கு பெண் தோழி மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
அவரை போலீஸார் கைது செய்ய நேபாளம் சென்றபோது அவர் சிக்கவில்லை. தலைமறைவானவர்களை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட சந்திர பரேயர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.