

கோவை: கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக வடவள்ளி நியூ கோல்டன் நகரைச் சேர்ந்த ராஜன் (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஓவிய ஆசிரியர் பணியுடன் யோகா ஆசிரியர் பணியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் ஓவிய ஆசிரியர் ராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளி முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். ஓவிய ஆசிரியர் ராஜனால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிகள் வேறு யாராவது உள்ளனரா? விசாரித்த போது, மேலும் சில மாணவிகள் அவர் மீது புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கோவை மாநகர காவல்துறையின், மத்திய பிரிவு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஓவிய ஆசிரியர் ராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜனின் பாலியல் சீண்டலில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், இவர்கள் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பதும் தெரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.