

சென்னை: சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மணிப்பூர் பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர், காதலியுடன் கைது செய்யப்பட்டார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷா பேம் (24). சென்னை மேற்கு மாம்பலத்தில் தங்கி மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி காலை 6 மணி அளவில் தோழிகள் இருவருடன் மெரினா கடற்கரைக்கு புறப்பட்டார். பேருந்தில் ஏறுவதற்காக கோடம்பாக்கம் சாலையில் தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் வந்த இளைஞர் ஒருவர், திடீரென ஆஷா பேமின் ரூ.48 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் குமரன் நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது ஆலப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா (19), அவரது காதலி சுசித்ரா (20) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். சம்பவத்தன்று சூர்யாவுடன் பைக்கில் சென்ற சுசித்ரா, ‘காதலர் தினம் வருகிறதே.. எனக்கு பரிசு எதுவும் வாங்கித் தரமாட்டாயா’ என்று கேட்டாராம். அந்த நேரத்தில் ஆஷா பேம் சாலையில் நடந்து செல்வதை பார்த்த சூர்யா, அவர் வைத்திருந்த செல்போனை பறித்து காதலிக்கு பரிசாக கொடுத்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூர்யா, தனது காதலியுடன் சேர்ந்து செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாகவும், அவற்றை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.