

சென்னை: மெத்தம்பெட்டமைன் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்தி உள்ளார். அப்பிரிவு போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அப்பிரிவு போலீஸார் நுங்கம்பாக்கம் போலீஸாருடன் ஒருங்கிணைந்து நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை சந்திப்பில் கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதித்தபோது அதில், மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருளை வைத்திருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த ராம்சந்தர் (34), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி கார்த்திக்ராஜா (27), நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜெக்பர் சாதிக் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் வியாபாரிகள் என்பது தெரிந்தது. இவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்கள் மட்டும் அல்லாமல் அதை உடலில் செலுத்துவதற்காக வைத்திருந்த 26 சிரிஞ்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.