

சென்னை: மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்து வந்த ஒடிசா இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரியமேடு போலீஸார் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையம், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 30 கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பிடிபட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரசாத் மாலிக் (20) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார், கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
அவர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகளை ரயிலில் கடத்தி வந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் பிரசாத் மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.