மணல் கடத்தல் புகாரில் திமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்கு: 3 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக பல அடி ஆழத்துக்கு தோண்டி மணல் கடத்திய வழக்கில் திமுக பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்த போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி பகுதியில் பாலாற்றையொட்டி தனியார் இடங்களில் சில அடி ஆழத்திலேயே மணல் கிடைக்கிறது. இதையடுத்து அவற்றை சிலர் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அள்ளி லாரிகளில் கடத்தி வருகின்றனர். அப்பகுதி மக்களின் தொடர் புகாரையடுத்து, டிஎஸ்பி செல்வக்குமார் தலைமையிலான போலீஸார் இருதினங்களுக்கு முன் அப்பகுதியில் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்தோர் போலீஸாரை பார்த்ததும் தப்பியோடினர். திருப்பத்தூரை சேர்ந்த பிரகாஷ் (40), தர்மபுரியை சேர்ந்த கோபி (25), திருவண்ணாமலையை சேர்ந்த பாண்டியன் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 3 லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரையூர் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் கண்டவராயன்பட்டி போலீஸார் திருப்பத்தூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் பஷீர்அகமது (43), பழனிவேலு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

மேலும் விசாரணையில் அப்பகுதியில் பல அடி ஆழத்துக்கு தோண்டி மணல் கடத்தி வந்துள்ளனர். அவற்றை திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in