

சென்னை: கொடுங்கையூரில் இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் பாக்கி விவகாரத்தில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார்(18). கடந்த 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கிரி இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதுஒருபுறம் இருக்க பிரேத பரிசோதனை அறிக்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அஜித்குமார் இயற்கையாக இறக்கவில்லை என்பதும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கொலை வழக்காக மாற்றி துப்பு துலக்கினர்.
இதில், அஜித்குமாரை கொலை செய்தது கொடுங்கையூர் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்(20), கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த பார்த்திபன்(24) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கொலை செய்தது ஏன் என்பது குறித்து இருவரும் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம்: அஜித்குமாரின் பாட்டி சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு மற்றும் காரிய நிகழ்ச்சிக்கு ஷாமியானா பந்தல் மற்றும் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொடுக்க எங்களை அணுகினார்.
அதன்படி, நாங்கள் நடந்து கொண்டோம். ஆனால், பேசியபடி பணம் தராமல் ரூ.8 ஆயிரம் பாக்கி வைத்து மீதம் உள்ள சொற்ப பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை விரைவில் தருவதாக உறுதி அளித்ததால் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால், பாக்கி பணம் தராமல் அஜித்குமார் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பணம் கேட்டு அஜித்குமாருக்கு போன் செய்தோம். ஆனால், அவர் எங்களது அழைப்பை எடுத்து பேசவில்லை. இதையடுத்து, நாங்கள் இருவரும் அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று பணம் கேட்டோம். அப்போது, எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கிருந்த கட்டில் பின்னும் கயிற்றால் அஜித்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றோம் என ஜனார்த்தனன், பார்த்திபன் இருவரும் வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.