

புதுச்சேரி அருகே திருபுவனையைச் சேர்ந்தவர், வணிகர் சங்க துணைத் தலைவர் செந்தில்குமார் (50). அங்குள்ள மேம்பாலம் அருகே இவர் நடத்தி வரும் ஓட்டல் மீது, இருசக்கர வாகனத்தில் இருவர் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், மூடப்பட்டிருந்த அந்த ஓட்டலின் முன்பகுதி சேதமடைந்தது.
இதுதொடர்பாக திருபுவனை போலீஸார், திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த மாநில திமுக பொதுக்குழு உறுப்பினரான காந்தியின் மகன் சபரிவாசன் (எ) சரவணப்பிரியன் (23), அவரது நண்பர் பிரபாகரன் (19) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், செந்தில்குமாரின் மகன் ராகுல் (19), சபரிவாசனின் காதலுக்கு உறுதுணையாக இருந்து கல்யாணத்துக்கு உதவியது தெரியவந்தது. திருமணத்துக்கு பிறகு சபரிவாசனும், ராகுலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் சபரிவாசனை அவரது மனைவி தரப்பினர் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சபரிவாசன், தனது நண்பருடன் சேர்ந்து ராகுல் குடும்பத்தினரின் ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.