

மேடவாக்கம்: சென்னை மேடவாக்கம் அருகே வாடகை வீட்டில் பதுங்கி இருந்த அசாமை சேர்ந்த தீவிரவாதி அபுசலாம் அலியை தமிழக க்யூ பிரிவு போலீஸார் உதவியுடன் அசாம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வங்கதேச நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு ‘அன்சருல்லாபங்களா’. இது, தடைசெய்யப்பட்ட அல்கொய்தா இயக்கத்துடன் நேரடி தொடர்பு உடையது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அபுசலாம் அலி என்பவர் சென்னை அருகே பதுங்கி இருப்பதாக அசாம் மாநில போலீஸார் சமீபத்தில் செல்போன் சிக்னல் உதவியுடன் கண்டுபிடித்தனர். இவர் அசாமின் துப்ரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை பற்றி சென்னையில் உள்ள க்யூ பிரிவுக்கு அசாம் போலீஸார் தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில், க்யூ பிரிவு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசங்கழனி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அவர் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அசாம் மாநில காவல் துறைக்கு க்யூ பிரிவு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, அபுசலாம் அலியை அசாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தீவிரவாதி அபு சலாம் அலி எதற்காக தமிழகம் வந்தார். நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநில சிறப்பு படை போலீஸார். ‘ஆபரேஷன் பிரகத்’ என்ற பெயரில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா மாநிலங்களிலும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.