

மெரினாவில் போலீஸ் என கூறி ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானி கான் 1-வது தெருவை சேர்ந்தவர் மகாதீர் முகமது (27). இவர் கடந்த 10-ம் தேதி, அவரது சகோதரர் அஸ்மத்தின் வங்கியில் டெபாசிட் செய்ய ரூ.17 லட்சம் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் மண்ணடியில் இருந்து ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மெரினா காமராஜர் சாலை கண்ணகி சிலை அருகே, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் மகாதீர் முகமதுவை வழிமறித்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, அவரது பையை சோதனை செய்தனர். அப்போது, அவரது பையில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தையும், இருசக்கர வாகனத்தின் சாவியையும் எடுத்துக்கொண்டு, காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளும் படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, மெரினா காவல் நிலையம் சென்ற மகாதீர் முகமது, போலீஸாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதன் பிறகு தான் 3 மர்ம நபர்கள், அவரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர்களை தேடி வந்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்த பவா(31), மதுக்கரையை சேர்ந்த விஜயராஜ்(34), தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்செல்வன்(24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வழிப்பறி செய்த பணத்தில் தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து ரூ.1.75 லட்சம் பணம், 6 பவுன் நகைகள், ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள ஸ்டீல் பீரோ, வாஷிங்மெஷின், பிரிட்ஜ், டிவி, 4 செல்போன்களை பறிமுதல் செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.