

சென்னை: நகைகளை பாலீஷ் போட்டு வருவதாகச் சென்ற நகை பட்டறை ஊழியர் 94 பவுன் நகையுடன் மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சம்சு அலாம் (48). இவர் ஓட்டேரி படவேட்டம்மன் கோயில் தெருவில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் நசீம் (28) என்பவரும் பணியாற்றி வந்தார். இவர் நகைகளை பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், 94 பவுன் நகைகளை அவரிடம் பாலீஷ் போடுவதற்காக ஷேக் சம்சு அலாம் நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். நகைகளை இரவே பாலீஷ் போட்டு ஒப்படைக்க வேண்டிய அப்துல் நசீம், நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகம் அடைந்த பட்டறை உரிமையாளர், இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீஸார், நகை பட்டறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அப்துல் நசீமின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் பெங்களூருக்கு சென்று அதன்பிறகு ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.