

மயிலாடுதுறை: கல்லூரி மாணவர் உட்பட 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராயம் விற்றதை கண்டித்ததாலும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாலும் இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(28), ராஜ்குமார்(34) ஆகியோர், புதுச்சேரி சாராயம், மது பாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக வாங்கி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தங்கதுரையின் சகோதரரர் மூவேந்தனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்(28) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், தினேஷ், அவரது நண்பர்கள் முட்டம் ஹரிஷ்(25), அவரது சகோதரர் அஜய்(19), மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரி சக்தி(20) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முட்டம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் தினேஷிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் ஹரிஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஹரி சக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அஜய் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாராய விற்பனையை தட்டிக் கேட்டதாலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாலும் இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி அரசு மருத்துவமனை அருகே உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், போராட்டத்தைக் கைவிட்டனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்றுக் கொட்டகைக்கு தீ வைத்த பொதுமக்கள், மூவேந்தன் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து, முட்டம் கிராமம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
டிஜிபி விளக்கம்: டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மூவேந்தன், தினேஷ் ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், மது விற்பனை தொடர்பாக கொலை நடந்திருப்பதாக சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.